திண்டுக்கல் அ. வெள்ளோடு அருகே சிறுநாயக்கன்பட்டி ஊரில் பொதுமக்கள் பயன்படுத்திய பொது மயானத்தை போலி பத்திரம் மூலம் விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். திண்டுக்கல் கிழக்கு வட்டம் அ. வெள்ளோடு கிராமம் சிறுநாயக்கன்பட்டி ஊர் மக்களுக்கு சொந்தமான கல்லறை நிலம் உள்ளது. இதனை சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் அதனை பயன்படுத்தி வருகின்றனர். இந்த இடத்தை தற்போது சிலர் வடமதுரை சார்பதிவாளர் அலுவலகத்தில் போலியாக பத்திரம் தயாரித்து விற்பனை செய்துள்ளனர்.
இது குறித்து கலெக்டரிடம் பல முறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கலெக்டர் இதனை விசாரணை செய்து, வடமதுரை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ள போலி ஆவணத்தை ரத்து செய்து மயானத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் தெரிவித்திருந்தனர்.