திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கொத்தபுள்ளி ஊராட்சி பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு கதிர் நரசிங்கபெருமாள் திருக்கோவில். இங்கு பெருமாள், ஸ்ரீபூதேவி, ஸ்ரீதேவியுடன், ஸ்ரீகதிர்நரசிங்க பெருமாளாக அருள் பாலிக்கிரார். இக்கோவில் மலைக்கோவிலான அருள்மிகு கோபிநாத சுவாமி கோவிலின் உப கோவிலாகும். இக்கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்வது வழக்கம்.
இவ்வருடம் புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு மூலவரான லட்சுமி சமேத கதிர்நரசிங்க பெருமாளுக்கு இராஜ அலங்காரமும், உற்சவருக்கு திருப்பதி ஏகாந்த சேவை அலங்காரமும் செய்திருந்தனர். முன் மண்டபத்தில் உற்சவர் ஏகாந்த சேவை அலங்காரத்தில் பக்தர்கள் தரிசனத்திற்காக வைக்கப்பட்டிருந்தார். கோவிலின் அக்னி மூலையில் உள்ள வீர ஆஞ்சநேயருக்கு கத்தரிக்காய், வெண்டை, வெண்பூசணி, சர்க்கரை பூசணி, பீட்ரூட், முருங்கை, பாகற்காய், முள்ளங்கி, கேரட், சௌசௌ, அவரைக்காய், கோவக்காய், காளிபிளவர், நார்த்தங்காய், புடலங்காய், சேனைக்கிழங்கு, வாழைக்காய், மாங்காய் உட்பட 25 வகையான காய்கறிகளைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்திருந்தனர்.
அதிகாலை முதல் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்தும் வெளியூர்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் கோவிலில் குவிந்தவண்ணம் இருந்தனர். ஒரு சிலர் நேர்த்திக்கடனுக்காக கோவில் முன்பு பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.