திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே புன்னப்பட்டியை சேர்ந்தவர் முருகன் (50). இவரது மனைவி தங்கமணி (45), மகள் பொன்மணி (வயது 12) மூவரும் தீபாவளிக்கு துணிகள் எடுப்பதற்காக இருசக்கர வாகனத்தில் (எக்செல்) புண்ணப்பட்டிலிருந்து நத்தம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது வீரப்பநாயக்கன்பட்டி அருகே சாலை வளைவில் திரும்பும் போது எதிரில் நத்தம் கோவில்பட்டியைச் சேர்ந்த சிவாஜி என்ற ராஜேஷ் என்பவர் ஓட்டி வந்த மணல் ஏற்றி வந்த டிராக்டர் மீது மோதியது. இதில் இரு சக்கர வாகனத்தில் வந்த தங்கமணி என்பவர் சாலையில் தவறி விழுந்துள்ளார். மணல் ஏற்றி வந்த டிராக்டரின் பின்பக்க சக்கரம் சாலையில் விழுந்த தங்கமணி உடல் மீது ஏறி இறங்கியது. படுகாயமடைந்தவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு நத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இறந்தவரின் உடல் உடற்கூறாய்விற்காக நத்தம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து நத்தம் போலீசார் விசாரணை செய்து டிராக்டர் ஓட்டுநரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தீபாவளிக்கு புத்தாடை எடுக்க ஆர்வத்துடன் வந்தவர் பலியான சம்பவம் ஊர் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.