நத்தம் அருகே சாத்தம்பாடி ஊராட்சி விளாம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 300 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வந்தனர். இப்பள்ளிக்கென இரண்டு கட்டிடங்கள் இயங்கி வந்தது. இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிக்கட்டிடம் ஒன்று மறு சீரமைப்பிற்காக இடிக்கப்பட்டது. இடிக்கப்பட்ட கட்டிடம் காமராஜர் ஆட்சி காலத்தில் அமைச்சர் கக்கன் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட கட்டிடம் என்பது குறிப்பிடத்தக்கது. கட்டிடம் இடிக்கப்பட்டதால் அங்கு படித்த மாணவ மாணவிகள் அருகில் உள்ள கலையரங்கத்திலும் மரத்தடியிலும் அமர்ந்து படிக்க வைக்கப்படும் அவல நிலை உள்ளது. பாடம் நடத்துவதற்கு ஏதுவாக மரத்தடியிலும் கலையரங்கத்திலும் கரும்பலகை வைக்க இடமின்றி பாடம் நடத்துவதிலும் கற்றுக் கொள்வதிலும் ஆசிரியர்களுக்கு மாணவர்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. தற்போது வரை பள்ளி கட்டிடம் கட்டாத காரணத்தினால் இங்கு பயின்ற நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பள்ளியை விட்டு விலகி அருகில் உள்ள ஊர்களில் இருக்கும் பள்ளிகளில் சேர்ந்து பயின்று வருகின்றனர். இதுகுறித்து தமிழர் தேசம் கட்சி மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக பள்ளியின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வருவாய்த்துறை, கல்வித்துறை மற்றும் காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தினர்.