திண்டுக்கல் மாவட்டம் நத்தம் குடகிப்பட்டி ஊராட்சியில் 100 நாள் வேலைத்திட்டத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் வழக்கம்போல் இன்று பணிக்குச் சென்ற பணியாளர்களுக்கு ஆன்லைன் மூலம் பதிவு செய்து வேலைக்கு அனுப்பும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் பழனிபட்டி, தொண்டபுரி, அடைக்கனூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்களுக்கு முன் பதிவு செய்யவில்லை எனக்கூறி வேலை வழங்க மறுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்ட 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் பழனிபட்டி கோடாங்கிபட்டி பேருந்து நிறுத்தம் அருகே திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் நத்தம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. இச்சாலை மறியல் போராட்டத்தால் அரை மணி நேரத்திற்கும் மேலாக செந்துறை நத்தம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.