கரந்தமலை தொடரில் ஏராளமான காட்டு மாடுகள் உள்ளது. தற்போது மழை ஏதுமின்றி மலைகளில் வறண்ட சூழ்நிலை நிலவுவதால் நீருக்காகவும் உணவுக்காகவும் மலையடிவார பகுதிகளில் உள்ள தோட்டங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு காட்டு மாடுகள் அடிக்கடி அதிகளவில் வருவது வாடிக்கையாகி விட்டது.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சக்கிலியங்கொடையில் வீரன் மகன் சின்னலிங்கம் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் தரை மட்டத்தில் உள்ள தண்ணீர் இல்லாத தூர்ந்து போன கிணறு ஒன்று உள்ளது. கரந்தமலையில் இருந்து 4 பெரிய காட்டு மாடுகளும் மற்றும் 1 கன்றும் உள்ளிட்ட 5 காட்டு மாடுகள் தரைத்தளத்தில் இருந்த கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டது.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் வனச்சரக அலுவலர் ஜெயசீலன் தலைமையிலான வனத்துறையினரும், நத்தம் தீயணைப்பு துறையினரும் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி கிணற்றின் பக்கவாட்டில் ஜேசிபி இயந்திரம் மூலம் பாதை அமைத்து கிணற்றுக்குள் விழுந்த 5 காட்டு மாடுகளையும் மீட்டனர். கிணற்றை விட்டு வெளியேறிய காட்டு மாடுகள் மீண்டும் மலையை நோக்கி ஓடியது.