திண்டுக்கல் மாவட்டம், அய்யம்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான ஆத்தூர், சித்தையன்கோட்டை, சித்தரேவு, கோம்பை, நரசிங்கபுரம், பட்டிவீரன்பட்டி, கன்னிவாடி, தர்மத்துப்பட்டி, கெங்குவார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிக பரப்பில் தென்னை விவசாயம் நடந்து வருகிறது. இதில் அய்யம்பாளையம் பகுதியில் மட்டும் நாட்டுரக நெட்டை தென்னை மட்டும் 10 லட்சம் மரங்கள் உள்ளன.
இதனால் தென்னங்கன்றுகள் பதியம் போடப்பட்டு திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையில் கொடுக்கப்பட்டது. எல்லா மண்வகைக்கும் ஏற்றதாக இருப்பதால் இதற்கு விவசாயிகளிடையே நல்ல வரவேற்பு இருப்பதைத் தொடர்ந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மரக்கன்றுகள் பதியம் போட்டு பிறப்பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு கொண்டிருக்கிறது.
நாட்டு ரக நெட்டை தென்னை அதிக ஆயுள் மட்டுமல்லாது தொடர்ந்து காய்ப்பு இருக்கும். பராமரிப்பு செலவும் மிகவும் குறைவு என்பதால் விவசாயிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நெட்டை ரக தென்னை புவிசார் குறியீடு (Geographical indication) வேண்டும் என்பது இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக இருந்தது. இந்நிலையில் தமிழக அரசு அய்யம்பாளையம் தென்னைக்கு புவிசார் குறியீடு பெற நிதிஒதுக்கீடு செய்துள்ளது. இதனால் திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.