சின்னாளபட்டி சேரன் வித்யாலயா பள்ளி மாணவர்கள் உணவு திருவிழா நடத்திஆதரவற்றோருக்கு நலஉதவி வழங்கி வருகின்றனர். சின்னாளபட்டி சேரன் வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் உணவு திருவிழாவில் 6 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்கள் வீட்டில் தயாரித்து கொண்டு வந்த உணவுப் பொருட்கள், தின்பண்டங்களை விற்பனை செய்து வருகின்றனர். இதன் மூலம் கிடைத்த வருவாயை கொண்டு சுற்று பகுதி ஆதரவற்ற ஏழை முதியோருக்கு உடை , போர்வை , உணவு உள்ளிட்ட உதவிகள் வழங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்தாண்டிற்கான திருவிழா அக். 21ல் துவங்கியது. அக். 29 வரை நடக்க உள்ள இதில் நேற்று 9ம் வகுப்பு மாணவர்கள் இனிப்பு பணியாரம், போளி, பானிப்பூரி, கட்லெட், சமோசா, பிரட் ஆம்லெட், கொழுக்கட்டை, அடை, அதிரசம், இடியாப்பம், பீட்ஸா, பால்பன் உள்ளிட்ட உணவுகளை விற்பனைக்கு வைத்திருந்தனர். பள்ளிமுதல்வர் திலகம் தலைமை வகித்தார். தாளாளர் சிவகுமார் முன்னிலை வகித்தார். மேலாளர் பாரதிராஜா வரவேற்றார். பள்ளி முதல்வர் திலகம் கூறுகையில், ''14 ஆண்டுகளாக உணவு விற்பனை திருவிழா நடத்தி வருகிறோம். சத்துள்ள உணவுப் பொருட்கள் , அவற்றின் பயன்களை மாணவர்கள் அறிந்து கொள்வதுடன், வணிக திறன், விற்பனை மேலாண்மை, வருவாய் பெறும் நுட்பங்கள் தொடர்பான தகவல்களை அனுபவம் மூலம் உணர்ந்து கொள்ள இதன் மூலம் வாய்ப்பு அளிக்கப்படுகிறது '' என்றார்.