தர்மபுரி மாவட்டம் இலக்கியம் பட்டி பகுதியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக பெருவிழா வெகுவிமர்சையாக நடைப்பெற்றது. இந்த விழா 5 -ம் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை கலச ஆராதனை, நவகிரக ஹோமம், பஞ்ச சூக்தஹோமம், துர்கா சகஸ்ரநாமம், மகா சாந்திஹோமம், வேதபாராயணம், பூர்ணாஹதி நடைப்பெற்றது. இதையடுத்து யாக சாலையிலிருந்து புனித நீர் கலச தீர்த்தம் கோவில் முக்கியஸ்தர்கள் தங்கள் தலைமீது எடுத்து சென்று கோயில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் செய்து திருக்குட நன்னீராட்டு தீபாரதனை காட்டினார்.
பின்னர் கலசத்திற்கு ஊற்றிய புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதனையடுத்து , ஸ்ரீ கன்னியம்மன் சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்து பின்பு பூக்களால் அலங்கரித்து மகா தீபாரதனை காட்டப்பட்டது. ஸ்ரீ கன்னியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த விழாவில் 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த விழாவையொட்டி பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ கன்னியம்மன் குலதெய்வ பங்காளிகள் விழா குழுவினர் செய்திருந்தனர்.