கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த திருப்பெயரில் நேற்று பெற்றோர்களைக் கொண்டாடுவோம் மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சர் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் ஸ்டாலின் நெய்வேலியில் இருந்து விருத்தாசலம் வழியாக சென்றார். முதல்வரை வரவேற்கும் வகையில் விருத்தாசலத்தில் பல்வேறு இடங்களில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதில் கலந்து கொள்ள மங்கலம்பேட்டை அடுத்த பழையபட்டிணம் கிராமத்தை சேர்ந்த 40 ற்கும் மேற்பட்டோர் டாடா ஏஸ் வேனில் விருத்தாசலத்தில் இருந்து கச்சிராயநத்தம் - இருசாளகுப்பம் சாலையில் வந்தபோது பாரம் தாங்காமல் வேன் சாலையின் குறுக்கே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் உட்பட 35 பேர் படுகாயமடைந்த நிலையில் அருகில் இருந்தவர்கள் உதவியோடு அனைவரும் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மற்றும் டாடா ஏஸ் வேன் மற்றும் அரசு பேருந்து மூலம் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் படுகாயமடைந்த 30 ற்கும் மேற்பட்டோர் விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி, புதுச்சேரி பிம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குப்புசாமி வயது 55 என்பவர் உயிரிழந்தார். இந்த நிலையில் விபத்து குறித்து விருத்தாசலம் டி. எஸ். பி பாலகிருஷ்ணன் தலைமையிலான காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.