கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சந்திப்பு சாலையில் கைப்பேசி உதிரிப்பாகங்கள் மொத்த விற்பனை நடத்தி வருபவர் ரமேஷ். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்து கடையைப் பூட்டி விட்டு சென்ற நிலையில் அவரது கடையில் நேற்று காலை தீப்பிடித்ததாக அந்த வழியாக சென்றவர்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
விருத்தாசலம் தீயணைப்பு நிலைய அலுவலர் கோ. சங்கர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மின் கசிவு காரணமாக தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இந்த விபத்தில் பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.