கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே சென்னை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் சென்னையிலிருந்து கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு விரைவு சொகுசு பேருந்து குமாரக்குடி வளைவுபால பகுதியில் எதிரே வந்த வாகனத்திற்கு வழி விட முயன்ற போது பிரேக் பிடிக்காமல் 30 அடி பள்ளமுள்ள வாய்க்கால் கரையில் தொற்றிக்கொண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வளைவு பாலம் அதிக விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. அது மட்டும் இல்லாமல் பாலம் பழுதடைந்து சுவர்கள் விரிசல் ஏற்பட்டு உள்ளன. இந்த பாலத்தை அகற்ற வேண்டும், புதிய பாலம் அமைக்க வேண்டும் என்று கூறியும் அரசு அதிகாரிகள் வேடிக்கை பார்க்கிறார்கள். மேலும் இந்த விபத்து ஏற்பட்ட பகுதியில் ஏற்கனவே 10க்கும் மேற்பட்ட விபத்துக்கள் ஏற்பட்டு ஐந்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் 30 அடி பள்ளத்தில் வாய்க்காலில் விழுந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அரசு பேருந்து விபத்தில் நல்வாய்ப்பாக பேருந்தில் பயணம் செய்த 20க்கும் மேற்பட்ட பயணிகள் அவசர அவசரமாக பேருந்திலிருந்து இறக்கி விடப்பட்டு மாற்று பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து வளைவு பால பகுதியில் அதிக விபத்துக்கள் ஏற்பட்டு வாகனங்கள் பள்ளத்தில் விழுந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.