கோவையில் உள்ள மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற ஆறு கோள்கள் அணிவகுப்பு நிகழ்வை பொதுமக்கள் நேற்று (ஜனவரி 22) ஆர்வமுடன் கண்டுகளித்தனர். இருப்பினும், மேக மூட்டம் காரணமாக கோள்களை தெளிவாக காண முடியாத நிலை ஏற்பட்டது.
சூரிய மண்டலத்தில் உள்ள கோள்கள் ஒரே நேர்கோட்டில் வருவது போல் தோன்றும் அரிய நிகழ்வுதான் கோள்கள் அணிவகுப்பு. இந்த நிகழ்வு, பூமியில் இருந்து பார்க்கும் போது ஏற்படும் ஒரு தற்காலிக ஒழுங்கமைப்பாகும். வரும் 25-ம் தேதி வரை இந்த அற்புத நிகழ்வை உலகின் பல பகுதிகளில் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோவை மண்டல அறிவியல் மையம் இந்நிகழ்வை பொதுமக்கள் காணும் வகையில் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது. தினமும் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்வில், நேற்று (ஜனவரி 22) பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
மேக மூட்டம் காரணமாக கோள்களை தெளிவாக காண முடியாத நிலை ஏற்பட்டாலும், பொதுமக்கள் தங்களது ஆர்வத்தை இழக்காமல் தொடர்ந்து வானை நோக்கினர். சில நேரங்களில் கோள்கள் தெரிந்ததும் அவர்கள் மகிழ்ச்சியுடன் கைதட்டி கொண்டாடினர்.