கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் தென்னம்பாளையம் அவிநாசி சாலையில் நீண்ட நேரமாக கேட்பாரற்று நின்ற கார் ஒன்றை சூலூர் காவல்துறையினர் சோதனை செய்தபோது, அதில் 74 விலை உயர்ந்த செல்போன்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட அந்த கார், செல்போன்களை திருடி வரும் கும்பலின் வாகனமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், சந்தேகத்தின் பேரில் அந்த காரை சோதனையிட்டனர். அப்போது, காரின் உள்ளே 74 விலை உயர்ந்த செல்போன்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக காரை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று, அதில் இருந்த செல்போன்களின் எண்களை தொடர்பு கொண்டு உரிமையாளர்களை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டனர். விசாரணையில், அந்த செல்போன்கள் ஆந்திரா, சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுடையது என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சூலூர் காவல் நிலைய ஆய்வாளர் கூறுகையில், மீட்கப்பட்ட 74 செல்போன்களின் மதிப்பு சுமார் 7 லட்சம் ரூபாய் இருக்கும். இவை அனைத்தும் விலை உயர்ந்த செல்போன்கள். இது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. செல்போன் உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவித்து, உரிய விசாரணைக்குப் பின்னர் ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்தார்.