வால்பாறையில், மளுக்கப்பாறை, மயிலாடும்பாறை, பன்னிமேடு, முடீஸ் தாய்முடி, பச்சமலை, வில்லோனி, தோணிமுடி, சோலையாறு உள்ளிட்ட எஸ்டேட்களில் யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன. இந்நிலையில், முடீஸ் தாய்முடி எஸ்டேட்டில், நேற்று முன்தினம் (செப்.,11) 15க்கும் மேற்பட்ட யானைகள் குட்டிகளுடன் முகாமிட்டன.
இதனால் அந்தப்பகுதியில் தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட முடியாமல் தவித்தனர். ரோட்டை ஒட்டியுள்ள தேயிலை காட்டில் யானைகள் முகாமிட்டதால், சுற்றுலா பயணியர் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று யானைகளை அருகில் உள்ள வனப்பகுதிக்குள் விரட்டினர்.
முடீஸ் முத்துமுடி எஸ்டேட் பகுதியில், 11 யானைகள் முகாமிட்டன. இதில் ஒரு கர்ப்பிணி யானை வேறு எங்கும் செல்லாமல் தேயிலை எஸ்டேட்டிலேயே முகாமிட்டது. இந்நிலையில், நேற்று (செப்.,12) காலை பெண் யானை குட்டியை ஈன்றது. தேயிலை காட்டில் யானை குட்டி ஈன்றதால், வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். யானை வேறு பகுதிக்கு இடம் பெயரும் வரை தொழிலாளர்களை அந்தப்பகுதியில் தேயிலை பறிக்க எஸ்டேட் நிர்வாகம் அனுமதிக்ககூடாது என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.