கோயம்புத்தூர் மாநகரின் முக்கிய நீர் ஆதாரமான சிறுவாணி அணையில் இருந்து விநியோகிக்கப்படும் குடிநீர் கடந்த ஒரு மாதமாக வீணாகி வருகிறது. கோவை வடவள்ளி - தொண்டாமுத்தூர் சாலையில் கே. ஜி. மில் பேருந்து நிறுத்தம் அருகே குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், குடிநீர் வீணாவதோடு, சாலையில் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். குறிப்பாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் செல்லும் நேரத்தில், சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால், மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
மேலும், தண்ணீர் தேங்கி நிற்பதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது. கோடை காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலையில், இதுபோன்று குடிநீர் வீணாவதால், அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, குடிநீர் குழாயை சரி செய்து, தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.