கோவை அருகே மேற்கு புறவழிச் சாலை அமைக்கும் பணி விவசாயிகளின் எதிர்ப்பை சந்தித்துள்ளது. சாலை அமைப்பால் விளைநிலங்கள், வீடுகள் செல்லும் வழிகள் பாதிக்கப்படுவதாகக் கூறி விவசாயிகள் நீண்ட காலமாக சர்வீஸ் ரோடு அமைக்கக் கோரி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று (டிசம்பர் 21) தெற்கு வருவாய் கோட்டாட்சியர் ராம்குமார் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டபோது, விவசாயிகள் திடீரென அவர்களை முற்றுகையிட்டனர். நீர் வழிப்பாதைகள் அடைக்கப்பட்டுள்ளதாகவும், சர்வீஸ் ரோடுகள் இல்லாததால் விவசாயிகள் பல கிலோமீட்டர் சுற்றி வர வேண்டியிருப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து, விவசாயிகள் சமாதானமாக கலைந்து சென்றனர். இருப்பினும், சர்வீஸ் ரோடு அமைப்பு குறித்து அதிகாரிகளிடம் விவசாயிகள் தொடர்ந்து கேள்விகள் எழுப்பியதால், அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.