கோவை மாவட்டம் அக்கநாயக்கன்பாளையத்தில் உள்ள கமலாலய தனியார் பள்ளி வளாகத்தில், மாவட்ட வட்டார அளவிலான தமிழக அரசின் கல்வி நாற்பது திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்ற கலையோடு விளையாடு என்ற புதுமையான கற்றல்-கற்பித்தல் முறைகளை ஊக்குவிக்கும் போட்டிகள் வெகு விமர்சையாக நடைபெற்றன.
சுல்தான் பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட 12 அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் இன்று இந்த போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி, மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், வகுப்பறையில் ஆசிரியர்கள் புதுமையான கற்பித்தல் முறைகளை பயன்படுத்த ஊக்கமளிக்கும் வகையில் அமைந்திருந்தது.
மாணவர்கள் பல்வேறு விதமான கலை சார்ந்த போட்டிகளில் உற்சாகமாக பங்கேற்றனர். இந்த போட்டிகள், மாணவர்களின் படைப்பாற்றல் திறனை வெளிக்கொணர்வதோடு, குழுவாக இணைந்து செயல்படும் திறனையும், பாடங்களை எளிதாக புரிந்து கொள்ளும் ஆற்றலையும் வளர்க்கும் வகையில் அமைந்திருந்தது.
போட்டியின் முடிவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வட்டார கல்வி அலுவலர் பிரான்சிஸ் சார்லஸ், லென்சிங் ஃபைவர்ஸ் நிர்வாக இயக்குநர் ரவி சந்திரன், லேன்சிங் ஃபைவர்ஸ் நிர்வாக கணக்காளர் அரசு ஆகியோர் பரிசு கோப்பைகளையும், சான்றிதழ்களையும் வழங்கினர்.