கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள பதிவில், தமிழக காவல்துறை உள்ளிட்ட பல அரசு அதிகாரிகள் போதைப் பொருள் கடத்தலுக்கு துணைபோவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு போதைப்பொருள் கடத்துபவர்களுக்கு, 850 தமிழக காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் துணைபோனதாக வெளியாகியுள்ள செய்தி தமிழக மக்களின் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதல்வரை நேரடியாக விமர்சித்துள்ள வானதி சீனிவாசன், தமிழகம் போதையின் பிடியில் சிக்கியிருக்க, போதையில்லா தமிழகத்தை உருவாக்குவேன் என்று நீங்கள் எடுத்த உறுதிமொழி என்னவாயிற்று என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தமிழகத்தில் ஒருபுறம் கஞ்சா வேட்டை என்ற நாடகத்தை நடத்தும் உங்கள் அரசு, மறுபுறம் போதைப்பொருள் கடத்தல்களுக்கு துணை நிற்கிறதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தின் எதிர்காலத்தை மனதில் கொண்டு, தமிழகத்தில் பெருகிவரும் இந்த போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்த வேண்டுமெனவும், போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக கூறப்படும் 850 அரசு அதிகாரிகளையும் விசாரித்து அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தமிழக மக்கள் சார்பாக வலியுறுத்தியுள்ளார்.