பொள்ளாச்சி அருகே உள்ள குள்ளக்காபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட நரிக்குறவர் காலனியில் வசித்து வரும் பிரபுதேவா என்பவர் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திடீரென தரையில் அமர்ந்து இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். கடந்த 3 மாதங்களாக தங்கள் காலனியில் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறி இருசக்கர வாகனத்தை நிறுத்தி தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார். வருவாய்த் துறையினர் பிரபுதேவாவிடம் விசாரணை மேற்கொண்டபோது, அவர் கூறியதாவது, எங்கள் காலனிக்கு மூன்று மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகள் எங்களிடம் அடிக்கடி பணம் வாங்குவதோடு மட்டுமல்லாமல் காடை, முயல், கௌதாரி என கேட்டாங்க. அதையும் நாங்க கொடுத்தாச்சு. ஆனால் இதுவரை தண்ணீர் விநியோகம் செய்யவில்லை. இதனால் குடிக்க கூட ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் சிரமப்பட்டு வருகிறோம். எல்லாம் கொடுத்தும் தண்ணீர் வரவில்லை. எனக்கூறி தர்மாவில் ஈடுபட்டார். பிரபுதேவாவின் இந்த வார்த்தைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. பின்னர் வருவாய்த்துறையினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அங்கு வந்த கிழக்கு காவல் நிலைய போலீசார், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பிரபுதேவாவை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.