கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டியில் உள்ள பெட்ரோல் பங்கில் கடந்த 1ம் தேதி அதிகாலை மதுபோதையில் வந்த ஆறு இளைஞர்கள், பெட்ரோல் பங்க் ஊழியர்களான சம்பத்குமார் (36) மற்றும் ஆனந்தகுமார் (40) ஆகியோரை கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பெட்ரோல் பங்கிற்கு வந்த இளைஞர்கள் பெட்ரோல் இல்லாததால் வாட்டர் கேன்களில் பெட்ரோல் கேட்டதாகவும், ஊழியர்கள் மறுத்ததால் தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது. அந்த கும்பல் சம்பத்குமாரை மண்வெட்டியால் சரமாரியாக தாக்கியதில் அவருக்கு தலை மற்றும் முகத்தில் பலத்த வெட்டுக்காயங்கள் ஏற்பட்டன. சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வந்த நிலையில், நேற்று குள்ளக்காபாளையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகப்படும்படியாக வந்த காரை நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில், காரில் இருந்த கோவையைச் சேர்ந்த அசில் (24), முகமது ஷாருக்கான் (23), முகமது ஜுபைர் (23), அப்துல் ஹீபர் (24), பிராங்கிளின் ஜோஷ்வா (24) மற்றும் நதீம் பாட்ஷா (21) ஆகிய ஆறு இளைஞர்களும் மதுபோதையில் பெட்ரோல் பங்க் ஊழியர்களை தாக்கியது தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் அவர்கள் ஆறு பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது, இந்த கொலைவெறி தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.