கிணத்துக்கடவு வட்டாரத்தில், மரவள்ளி சாகுபடி 30 ஹெக்டேர் அளவில் உள்ளது. இதில், மாவுப்பூச்சி தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளதால், கிணத்துக்கடவு தோட்டக்கலை துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
மரவள்ளி செடியின் இலை மற்றும் தண்டு பகுதியில் மாவு பூச்சிகள் பெருகி, சாறு உறிஞ்சி தாக்குகிறது. செடியின் அடிப்பகுதி, குருத்து கிளைகள் மற்றும் தண்டு பகுதியில் வெள்ளையாக அடை போல திட்டு திட்டாக பூச்சிகள் படர்ந்திருக்கும். பூச்சிகள் தட்டின் சாரை உறிஞ்சுவதால் இலையின் நிறம் மாறி காய்ந்து விடும்.
மாவுப்பூச்சியை கட்டுப்படுத்த, ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மையை பின்பற்ற வேண்டும். இதில், மரவள்ளி செடியின் இளம் பருவத்தில் எறும்பு மற்றும் மாவு பூச்சியை கண்காணித்து, பாதுகாப்பு முறைகளை மேற்கொள்ள வேண்டும். ஒட்டுண்ணிகள் மற்றும் இரை விழுங்கிகள் அதிகம் இருக்கும் போது, பூச்சிக்கொல்லிகள் தெளிப்பதை தவிர்க்க வேண்டும்.
மேலும், மாவுப்பூச்சி தாக்குதல் ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டால், வேப்ப எண்ணெய் இரண்டு சதவீதம் அல்லது அசாடிராக்டின் 5 மில்லியை, ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம். ஊடுபயிர், வரப்பு பயிர் சாகுபடி செய்வதன் வாயிலாக நன்மை செய்யும் பூச்சிகளை வரவழைத்து, தீமை செய்யும் பூச்சிகளை அழிக்கலாம், என ஆலோசனை வழங்கியுள்ளனர்.