தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் இன்று(செப்.10) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக கோவை டவுன் ஹால் பகுதியில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி வளாகத்தில் தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும், அரசாணை 243 ஐ ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். சுமார் 60-க்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.