கோவை: ஓய்வூதியர் குறைகளுக்கு விரைந்து தீர்வு!

82பார்த்தது
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று ஓய்வூதியர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அரசு நிதித்துறை செயலாளர் (செலவினம்) நாகராஜன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பல்வேறு துறை சார்ந்த ஓய்வூதியர்கள் தங்கள் குறைகளை முன்வைத்தனர்.
ஊரக வளர்ச்சித் துறை, மாநகராட்சி பள்ளி கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 59 ஓய்வூதியர்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன. குடும்ப ஓய்வூதியம், குடும்ப பாதுகாப்பு நிதி, மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் செலவினத் தொகையை திரும்பக் கோருதல், சிறப்பு சேமநல நிதி, பணிக்கொடை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஓய்வூதியர்கள் மனு அளித்தனர்.
கூட்டத்தில் பேசிய அரசு நிதித்துறை செயலாளர் நாகராஜன், பழைய ஓய்வூதியத் திட்டத்தில் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறுபவர்களுக்கு, ஓய்வு பெற்ற ஒரு மாதத்திற்குள் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், ஓய்வூதியர்களிடமிருந்து பெறப்படும் மனுக்களின் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் தனிக் கவனம் செலுத்தி, அவர்களின் குறைகளை விரைந்து தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் பவன்குமார், மண்டல இணை இயக்குநர் பால்முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி