திருப்பரங்குன்றத்தை மையமாக வைத்து மத அடிப்படைவாதிகள் தமிழக மக்களுக்குச் சவால் விடுத்துள்ளனர் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் சமூக நல்லிணக்கம் நிலவுவதாலும், சட்டம் - ஒழுங்கு பாதுகாக்கப்படுவதாலும் தமிழகம் வளர்ச்சிப் பாதையில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. மனித வளம், தொழில் வளம் என அனைத்துத் தளங்களிலும் இந்தியாவிலேயே முதன்மையான மாநிலமாகத் தமிழகம் திகழ்வதற்கு இங்கு நிலவும் சமூக நல்லிணக்கமே காரணமாகும். தமிழக மக்களின் முன்னேற்றத்தை விரும்பாத சனாதன சக்திகள் இங்கு சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை ஏற்படுத்தி சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கப் பார்க்கிறார்கள்.
இந்தக் குற்றச் சாட்டு குறித்து தமிழக முதல்வர் விசாரித்துத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். திருப்பரங்குன்றத்தில் சனாதன சக்திகளைச் சரியாகக் கையாளாமல் விட்டால் அவர்கள் தமிழகம் முழுவதும் இப்படி கலவரங்களை ஏற்படுத்துவார்கள். இதைத் தமிழக அரசு உணரவேண்டும். திருப்பரங்குன்றத்தை மையமாக வைத்து மத அடிப்படைவாதிகள் தமிழக மக்களுக்குச் சவால் விடுத்துள்ளனர். அதை எதிர்கொள்ள வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு மட்டுமல்ல, மதச்சார்பற்ற சக்திகள் அனைவருக்கும் உள்ளது. தமிழகத்தைக் காக்கும் கடமையை நிறைவேற்ற அனைத்து ஜனநாயக சக்திகளும் முன்வரவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.