மாலைநேர மின் தேவையை சமாளிக்க மேலும் 1000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய மின்வாரியம் முடிவு செய்துள்ளது. மின்சார தேவை அதிகமாக இருக்கும் நேரங்களில் மின் வாரியத்திற்கு சொந்தமான மின் நிலையங்களின் உற்பத்தி தவிர, மத்திய தொகுப்பு மின்சாரம், தனியாரிடம் இருந்து மின் கொள்முதல், மாநிலங்களுக்கு இடையேயான பரிமாற்ற ஒப்பந்தம் ஆகியவை மூலம் மின் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. மாலை நேரங்களில் அதிகரித்து வரும் மின்தேவையை சமாளிக்கவும், சந்தையில் இருந்து மின்சாரம் வாங்குவதால் ஏற்படும் நிதிச்சுமையை குறைக்கவும் செப். 1ம் தேதி முதல் 5 ஆண்டுகளுக்கு மேலும் 1, 000 மெகாவாட் மின்சாரத்தை நடுத்தர கால மின் கொள்முதல் ஒப்பந்தத்தில் வாங்க மின்வாரியம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: 2023ம் ஆண்டு முதல் சூரியன் மறைந்த பிறகு பயன்படுத்தப்படும் மின்சார தேவை சுமார் 16, 000 மெகாவாட் ஆக இருக்கிறது. இந்த தேவையை பூர்த்தி செய்யும் போது 4, 000 மெகாவாட் பற்றாக்குறையாக உள்ளது. மேலும் இந்த நேரத்தில் சூரிய சக்தி இருக்காது மற்றும் காற்றாலை மின் உற்பத்தியை கணிக்க முடியாது. மின்வாரியம் முந்தைய நாள் சந்தையில் இருந்து 10 ரூபாய்க்கு வாங்குவதற்கு தயாராக உள்ளது, 15 முதல் 25 சதவீதம் மட்டுமே கிடைக்கிறது. அந்த நாளுக்குள் வாங்கப்படும் மின்சார விலை அதிகமாக இருக்கிறது, ஒரு யூனிட் 15 முதல் 20 வரை வாங்கப்படுகிறது.