தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்காமல், மத்திய அரசிடம் நிவாரண நிதியை அளிக்க பழனிசாமி அழுத்தம் தரவேண்டும் என்று அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில், செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது, உண்மையிலேயே பழனிசாமிக்கு மனசாட்சி இருந்தால் உயிர் சேதமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்திருக்க வேண்டும். அதைவிட்டு, வஞ்சக எண்ணத்துடன் குறை சொல்லி வருகிறார். அவர், வெள்ள நிவாரண தொகையை மத்திய அரசிடம் இருந்து கேட்டுப்பெற அழுத்தம் தர வேண்டுமே தவிர, தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்கக் கூடாது. விழுப்புரத்தில், இருவேல்பட்டு மற்றும் அரசூர் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து வடிந்த பின்னர் அங்கிருக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சர் பொன்முடி சென்றிருந்தார்.
அப்போது, குறிப்பிட்ட கட்சியில் மகளிரணி பொறுப்பில் இருக்கும் விஜயராணி மற்றும் அவரது உறவினர் ராமர் என்பவரும் உள்நோக்கத்துடன் அமைச்சர் மீது சேற்றை வாரி வீசியுள்ளனர். இதுபோன்ற எதிர்ப்புகளை கண்டு அஞ்சாமல், மக்கள் பணிகளில் தொடர்ந்து பயணிப்போம். விஞ்ஞான ரீதியாக நாம் வளர்ந்திருந்தாலும் ஒருசில பேரிடர்களை கணிக்க முடியாத இடத்தில்தான் உள்ளோம் என அவர் தெரிவித்தார்.