விநாயகர் சதுர்த்திக்கு சென்னையில் 5, 501 சிலைகள் பிரதிஷ்டை செய்ய இந்து முன்னணி முடிவு செய்துள்ளது.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, சென்னையில் 5, 501 சிலைகளை பிரதிஷ்டை செய்ய இந்து முன்னணி ஏற்பாடு செய்து வருகிறது. இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை ரெட்டேரியில் நடந்தது.
இந்த கூட்டத்தில் மாநில செயலாளர் மணலி மனோகர், மாநில செய்தி தொடர்பாளர் ஏ. டி. இளங்கோவன், மாநில துணை தலைவர் ஜி. கார்த்திகேயன், இந்து கலை இலக்கிய மாநில பொறுப்பாளர் கனல் கண்ணன், மாநில பொருளாளர் ஆர். கிருஷ்ணமூர்த்தி உட்பட இந்து முன்னணி மாநகர, மாவட்ட, தொகுதி பொறுப்பாளர்கள், விநாயகர் சதுர்த்தி கமிட்டி குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், சென்னையில் 5, 501 சிலைகளை பிரதிஷ்டை செய்து விநாயகர் சதுர்த்தி தினமான செப். 7 முதல் 15-ம் தேதி வரை 9 நாட்கள் ஒருங்கிணைத்து விழாவை கோலாகலமாக நடத்த வேண்டும்.
தமிழக முதல்வர், எதிர்க்கட்சித்தலைவர் மற்றும் அனைத்துக் கட்சி தலைவர்கள், சமுதாய தலைவர்களை இந்த விழாவுக்கு அழைத்திட வேண்டும். மாணவர் தினம், இளைஞர் தினம் என விழா நடைபெறும் ஒவ்வொரு நாளும் சிறப்பு தினமாக கொண்டாட வேண்டும். பட்டினப்பாக்கத்தில் இந்து எழுச்சி நிகழ்ச்சி நடைபெறும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.