விவசாயிகள் நலனையும், தமிழ்நாட்டின் உணவுப் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ. 3000 கிடைக்கும் வகையில் ஊக்கத்தொகையில் அளவை தமிழக அரசு உயர்த்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் 2023-24ஆம் ஆண்டுக்கான நெல் கொள்முதல் பருவம் கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதியுடன் நிறைவடைந்து விட்ட நிலையில், நெல் கொள்முதல் அளவு 34. 96 லட்சம் டன்னாக குறைந்து விட்டது. இது கடந்த 2022-23ஆம் ஆண்டில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லின் அளவான 44. 22 லட்சம் டன்னை விட 9. 26 லட்சம் டன், அதாவது 21% குறைவு ஆகும். தமிழ்நாட்டில் நேரடி நெல் கொள்முதல் அளவு கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து குறைந்து வருவது கவலை அளிக்கிறது.
தமிழ்நாட்டில் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ. 3000 வழங்க வேண்டும் என்பது தான் விவசாயிகளின் கோரிக்கை ஆகும். ஆனால், நேற்று முதல் தொடங்கியுள்ள கொள்முதல் பருவத்தில் மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள விலையான 2320 ரூபாயுடன் ரூ. 130 ஊக்கத்தொகை சேர்த்து ரூ. 2450 மட்டும் தான் வழங்கப்படுகிறது. இது எந்த வகையிலும் போதுமானது அல்ல. எனவே, விவசாயிகள் நலனையும், தமிழ்நாட்டின் உணவுப் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ. 3000 கிடைக்கும் வகையில் ஊக்கத்தொகையில் அளவை தமிழக அரசு உயர்த்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.