கூட்டுறவு சங்கங்கள் மூலமாக உரங்கள் மற்றும் பயிர்க்கடன் கிடைப்பதற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி நீர்ப்படிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகள் நிரம்பி வழிவதால் மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு விநாடிக்கு 80 ஆயிரம் கன அடியாக அதிகரித்திருக்கிறது.
கர்நாடக அணைகளில் இருந்து விநாடிக்கு ஒரு லட்சம் கன அடிக்கும் கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்படும் நிலையில், வெள்ள ஆபத்தை தடுக்கும் வகையிலும், காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்கான முன்னேற்பாடுகளை தொடங்கும் வகையிலும், அணை நிரம்பும் வரை காத்திருக்காமல் உடனடியாக தண்ணீர் திறக்க அரசு முன்வர வேண்டும்.
சம்பா சாகுபடி பணிகளைத் தொடங்க குறைந்தது ஏக்கருக்கு ரூ. 15 ஆயிரம் வரை செலவாகும். ஆனால், கடந்த ஆண்டு சம்பா, குறுவை ஆகிய இரு பருவங்களிலும் நெல் சாகுபடி தோல்வியடைந்ததால், பெரும்பான்மையான விவசாயிகளிடம் பணம் இல்லை.
இதையும் தமிழக அரசு கருத்தில் கொள்ள வேண்டும். காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடி செய்யப்படுவதற்கு வசதியாக வேளாண் துறை அலுவலகங்கள் வாயிலாக விதை நெல்கள், கூட்டுறவு சங்கங்கள் மூலமாக உரங்கள் மற்றும் பயிர்க்கடன் கிடைப்பதற்கு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.