அமைச்சரவையில் சில நகாசு வேலைகளை செய்ததன் மூலம் அமைச்சரவையில் சமூகநீதியை நிலைநாட்டி விட்டதாக திமுக பெருமைப்பட்டுக் கொள்ள முடியாது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தமிழக அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. முதலமைச்சர் மு. க. ஸ்டாலினின் புதல்வர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். அமைச்சர்கள் மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கே. இராமச்சந்திரன் ஆகியோர் நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக செந்தில் பாலாஜி, முனைவர் கோவி. செழியன், பனைமரத்துப்பட்டி இராஜேந்திரன், ஆவடி நாசர் ஆகியோர் புதிய அமைச்சர்களாக்கப்பட்டுள்ளனர். புதிய வாய்ப்பு பெற்றவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதலமைச்சரால் தியாகி என்று போற்றப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, அவருக்கு எதிரான வழக்குகளில் சாட்சிகளை கலைப்பது உள்ளிட்ட சட்டத்தை வளைக்கும் செயல்களில் ஈடுபடுகிறாரா? என்பதை நீதிமன்றங்களும், விசாரணை அமைப்புகளும் கண்காணிக்க வேண்டும். அத்தகைய செயல்களில் ஈடுபட்டால் அதை உரிய நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று, அவருக்கு வழங்கப்பட்டுள்ள பிணையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.