சென்னை: பல்லாவரம் பகுதியில் கிரெடிட் கார்டு கடன் தொகையை அதிகப்படுத்துவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை பல்லாவரம் அருகேயுள்ள பொழிச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்(40). தனியார் நிறுவன ஊழியரான இவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட மர்மநபர் ஒருவர், தான் ஒரு வங்கி அதிகாரி என்றும், கிரெடிட் கார்டு கடன் தொகையை அதிகரிப்பதாகவும், இதற்காக செல்போனிற்கு லிங்க் அனுப்பியுள்ளதாக கூறியுள்ளார். பின்னர் அந்த லிங்கை கிளிக் செய்ததும் வரும் ஓடிபியை சொல்லும்படி கூறியுள்ளார். அதை நம்பிய அவரும் லிங்கை கிளிக் செய்து ஓடிபியை கூறியுள்ளார்.
இதையடுத்து அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ. 1. 50லட்சம் மாயமானது. உடனே இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் ஆம்பூர் பகுதியில் உள்ள முகமது உசேன் என்பவரது வங்கி கணக்கிற்கு பணம் சென்றிருப்பது தெரியவந்தது. ஆம்பூர் விரைந்த போலீசார் முகமது உசேன் மற்றும் ரவிகுமார் ஆகிய இருவரை கைது செய்தனர்.