கன்னியாகுமரி கனிமவள கொள்ளை விவகாரம்: ராமதாஸ் கண்டனம்

58பார்த்தது
கன்னியாகுமரி கனிமவள கொள்ளை விவகாரம்: ராமதாஸ் கண்டனம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் கனிமவளக் கொள்ளை மிகப் பெரிய அளவில் நடைபெற்று வருவதாகக் குற்றம் சாட்டியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், வயநாடு பேரிடர்போல் தமிழகத்திலும் நிகழ்ந்தால் தான் திராவிட மாடல் அரசு திருந்துமா என கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காலநிலை மாற்றத்தின் தீமைகள் குறித்தும், பேரிடர்களைத் தடுக்க வேண்டியதன் தேவை குறித்தும் தொடர்ந்து பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அது குறித்த அக்கறை எதுவும் இல்லாமல் குமரி மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் கனிமவளக் கொள்ளை கட்டுப்பாடின்றி தொடர்ந்து வருகிறது. இயற்கை நலனிலும், மக்கள் நலனிலும் சிறிதும் அக்கறை இல்லாமல், பேரிடரை விலை கொடுத்து வாங்கும் அத்துமீறல்களுக்கு, தமிழக அரசு மறைமுகமாக துணை போவது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் நடைபெறுவது அறிவார்ந்த அரசாக இருந்தால் கன்னியாகுமரி மாவட்டத்தை பாதுகாக்கும் வகையில் அங்கு நடைபெறும் கனிமவளக் கொள்ளையை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும். கஸ்தூரிரங்கன் குழு பரிந்துரையின்படி மேற்குத் தொடர்ச்சி மலையின் பாதுக்காக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்ட இடங்களில் கனிமவளங்களை வெட்டி எடுக்க வழங்கப்பட்ட உரிமங்களை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். குமரி மாவட்டத்தின் இயற்கை அழகை அரசு போற்றிப் பாதுகாக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி