நாடாளுமன்ற பராமரிப்பு என்கிற பெயரால், காந்தி, அம்பேத்கர், சத்திரபதி சிவாஜி ஆகியோரது சிலைகள் அகற்றப்பட்டு, இடம் மாற்றம் செய்து வருகின்றனர். நாடு மதித்து போற்றும் தலைவர்களை அவமதிக்கும் செயலை மோடி அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த பத்தாண்டுகளாக மாற்றுக் கருத்துகளுக்கும் விமர்சனம் செய்யும் கருத்துரிமையினையும் சகித்துக் கொள்ள முடியாத, பாசிச வகைப்பட்ட தாக்குதலை மோடி அரசு நடத்தி வந்தது. இதன் காரணமாக சிலர் கொல்லப்பட்டனர். பலர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வெறுப்பு அரசியல் தொடரக் கூடாது என்று, மக்கள் வாக்களித்ததன் மூலம் தெளிவாக எச்சரித்துள்ளனர்.
ஆனால், விக்கிரமாதித்தன் கதை வேதாளம் மீண்டும், மீண்டும் மரம் தேடி செல்வது போல், மோடி பிரதமர் பொறுப்பை ஏற்கும் முன்னதாகவே அன்னிய ஆதிக்கத்தை எதிர்த்தும், அரசியல் உரிமைக்காகவும் போராடி மறைந்த தலைவர்களை அவமதிக்கும் நடவடிக்கை தொடங்கி விட்டது.
நாடு மதித்து போற்றும் தலைவர்களை அவமதிக்கும் செயலை மோடி அரசு உடனடியாக கைவிட வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது அவரை ஆதரித்து நிற்போர் அவருக்கு தக்க அறிவுரை வழங்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.