சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் ஆணவத்துடன் செயல்படுவது நல்ல அறிகுறி கிடையாது என்று உயர் நீதிமன்ற நீதிபதி ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் செவிலியர் ஒருவரை தாக்கியதாகவும், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், கனகசபையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்ய உதவியதாகவும் கூறி நடராஜ தீட்சிதர் என்பவரை இடைநீக்கம் செய்து பொது தீட்சிதர்கள் குழு நடவடிக்கை எடுத்தது. இதை எதிர்த்து நடராஜ தீட்சிதர் அறநிலையத் துறை இணை ஆணையரிடம் முறையீடு செய்தார். அதை விசாரித்த கடலூர் இணை ஆணையர், நடராஜ தீட்சிதரின் இடைநீக்கத்தை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இணை ஆணையரின் உத்தரவை எதிர்த்து பொது தீட்சிதர்கள் குழு செயலாளரான வெங்கடேச தீட்சிதர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எம். தண்டபாணி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தீட்சிதர்களின் செய்கையால் சிதம்பரம் கோயில் ஆரூத்ரா தரிசனத்துக்கு முன்புபோல பக்தர்கள் கூட்டம் வருவதில்லை. இதேநிலை நீடித்தால் பக்தர்கள் வருகை குறைந்து பழமையான நடராஜர் கோயில் பாழாகி விடும். கோயிலில் காசு போட்டால் மட்டுமே பூ கிடைக்கிறது. இல்லையென்றால் விபூதி கூட கிடைக்காது என்று நீதிபதி தெரிவித்தார். பின்னர் இந்த வழக்கில் அறநிலையத்துறை தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக். 21ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.