சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் சாய்ந்த 67 மரங்கள் உடனடியாக அகற்றப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சி சார்பில் 300 இடங்களில் நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு மையத்திலும் 200 நபர்கள் வரை தங்கும் வசதி செய்யப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்னை மாநகராட்சி பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 131 மி. மீ. மழை பெய்துள்ளது. மழையின் காரணமாக சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் சாய்ந்த 67 மரங்கள் உடனடியாக அகற்றப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சி சார்பில் 300 இடங்களில் நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு மையத்திலும் 200 நபர்கள் வரை தங்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தாழ்வான பகுதிகளில் இருந்து 1360 நபர்கள் அழைத்து வரப்பட்டு 36 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை மாநகராட்சியில் உள்ள 388 அம்மா உணவகங்களில் இன்றும், நாளையும் பொதுமக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படும். சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து சீராக உள்ளது. நீர்தேங்கியுள்ள 542 இடங்களில் 412 இடங்களில் மழைநீர் அகற்றப்பட்டுள்ளததோடு, மீதமுள்ள இடங்களிலும் நீர் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மழைநீரை வெளியேற்றும் வகையில் பல்வேறு திறன் கொண்ட 1, 223 மோட்டார் பம்புகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.