பாலியல் வன்கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன்நிறுத்தி, அவர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத்தர வேண்டியதுதான் அரசின் கடமையாக இருக்க வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை முன்வைத்து, சட்டப்பேரவை வந்த அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும், 'யார் அந்த சார்?' பேட்ஜ் அணிந்து, கையில் பதாகைகளை ஏந்தியவாறு வந்திருந்தனர். இதனால், சட்டப்பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
பேரவை வெளியே சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் தமிழக அரசைக் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பழனிசாமி, அண்ணா பல்கலை விவகாரத்தில், இனியும் இந்த அரசு தூங்கிக் கொண்டிருக்கக் கூடாது என்பதற்காக, அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காகத்தான், விழிப்புணர்வு பதாகைகளை கொண்டு சென்றோம்.
'யார் அந்த சார்?' என கேள்வி எழுப்பினால், ஏன் இந்த அரசு பதற்றம் அடைகிறது? இந்த விவகாரத்தில், மாறி மாறி அமைச்சர்கள் அறிக்கை வெளியிட்டுக் கொண்டுள்ளனர். மாணவிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் போராட்டம் நடத்துகிறோம் என்று அவர் கூறினார்.