ஆளுநர் உரையுடன் தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது

73பார்த்தது
ஆளுநர் உரையுடன் தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது
ஆளுநர் ஆர். என். ரவி உரையுடன் சட்டப்பேரவை இன்று கூடுகிறது. 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம்தென்னரசு வரும் 19-ம் தேதிதாக்கல் செய்கிறார். சட்டப்பேரவை கூட்டத்தொடரில், சட்டம் - ஒழுங்கு, சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலைய விவகாரம், முதலீடு ஈர்ப்புதொடர்பான முதல்வரின் வெளிநாட்டு பயணம் உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் வழக்கமாக ஜனவரி மாதம் ஆளுநர் உரையுடன் தொடங்கும். கடந்த ஆண்டின் முதல் கூட்டத்தில் ஆளுநர் ஆர். என். ரவி உரையாற்றும்போது, தமிழக அரசு தயாரித்து அளித்த உரையில் சிலவற்றை தவிர்த்தும், சிலவற்றை சேர்த்தும் வாசித்தார்.

இதனால், ஆளுநர் இருக்கும்போதே, அவருக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் முன்மொழியப்பட்டது. அப்போது, அவையில் இருந்து ஆளுநர் வெளியேறிய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து, பொது நிகழ்ச்சிகளில் ஆளுநர் தெரிவித்த கருத்துகளால், தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே நிலவிய பனிப்போர் மேலும் தீவிரமடைந்த நிலையில், கடந்த ஆண்டு சட்டப்பேரவை கூட்டத்தையும் ஆளுநர் முடித்து வைக்காமல் இருந்தார். இந்த காரணங்களால், இந்த ஆண்டின் முதல் கூட்டத்தில் ஆளுநர் பங்கேற்பாரா என்ற சந்தேகம் இருந்தது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி