மத்திய அரசு பணியாளர்களுக்கு வழங்குவது போல் மாநில அரசு பணியாளர்கள், ஆசிரியர்களுக்கும் பணிக்கொடையினை ரூ. 25 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டுமென்று தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து இச்சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளரும், விழுப்புரம் மாவட்ட தலைவருமான கவிஞர் சிங்காரம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 1. 1. 2024-ம் தேதி முதல் ஓய்வுபெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ. 20 லட்சத்தில் இருந்து ரூ. 25 லட்சமாக பணிக்கொடை உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, மாநில அரசு பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பணிக்கொடையையும் 1. 1. 2024-ம் தேதி முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு நிகராக ரூ. 25 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். தற்போது வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியத்தை குறைந்தபட்சம் 9 ஆயிரமாக உயர்த்த வேண்டும்.