சேலம் சரக டிஐஜி ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு

71பார்த்தது
சேலம் சரக டிஐஜி ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட கோயில் நிலங்களில் இருந்து ரூ. 198. 65 கோடி மதிப்புள்ள கனிம வளங்கள் திருடப்பட்டது குறித்து சேலம் சரக டிஐஜி நேரில் ஆஜராகி, விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு சொந்தமான நிலங்களின் கனிம வளங்கள் கோடிக்கணக்கில் திருடப்பட்டு வருவதாக சேலத்தை சேர்ந்த ஏ. ராதாகிருஷ்ணன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு ஏற்கெனவே நீதிபதி எஸ். எம். சுப்ரமணியம் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து நீதிபதி எஸ். எம். சுப்ரமணியம் பிறப்பித்துள்ள உத்தரவில்,  இந்த வழக்கின் தீவிரத்தை கருத்தில் கொண்டு கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் உள்ள கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களில் உள்ள கனிம வளங்கள் திருடப்படுவதை தடுக்க சேலம் சரக போலீஸ் டிஐஜி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மாவட்டங்களில் கனிம வள குற்றங்கள் தொடர்பாக இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்தும், எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்தும் அவர் வரும் 26ம் தேதி நேரில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி