யூடியூபர் சவுக்கு சங்கரை, ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உதகை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த சவுக்கு சங்கர், ‘சவுக்கு மீடியா’ என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். அதில், விவாத நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். இதுதவிர பல்வேறு தனியார் யூடியூப் சேனல்களின் விவாதங்களில் பங்கேற்று அரசியல் தொடர்பான கருத்துகளை பேசியும் விமர்சித்தும் வந்தார். அப்படி தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த சவுக்கு சங்கர், போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பெண் போலீஸார் குறித்து அவதூறான கருத்துகளை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் மீது கோவையை சேர்ந்த பெண் உதவி ஆய்வாளர் ஒருவர் சைபர் க்ரைமில் புகார் அளித்தார்.
இப்புகாரின் பேரில் சவுக்கு சங்கர் மீது வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் கடந்த மே 4-ம் தேதி தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் வைத்து அவரைக் கைது செய்தனர். கோவையைத் தொடர்ந்து சென்னை, சேலம், திருச்சி என அடுத்தடுத்து பெண் போலீஸார் சவுக்கு சங்கர் மீது புகார் அளித்தனர். இப்புகார்களின் அடிப்படையில் பேரில் மேற்கண்ட மாவட்டங்களில் சவுக்கு சங்கர் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, பெண்களை அவதூறாக பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.