24 மணிநேரமும் பாதுகாவலர், பயோமெட்ரிக் நுழைவு முறை, வைஃபை வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்று பல வசதிகளுடன் அந்த விடுதிகளை அமைக்க இருக்கிறோம் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில், உலக மகளிர் தினம் இன்று (மார்ச் 8) சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, அரசியலில், வேலை பார்க்கின்ற இடத்தில் என்று அனைத்து இடங்களிலும் உரிய மதிப்பும், மரியாதையும், பாதுகாப்பும் அவர்களுக்கு வழங்கப்படவேண்டும். கேலி பேசுவதும், அவர்கள் வளர்ச்சியைக் கொச்சைப்படுத்துவதும் இருக்கவே கூடாது. அதுதான் உண்மையான சமுதாய சிந்தனை வளர்ச்சி. இதை எல்லோரும் கடைப்பிடிக்க வேண்டும். திராவிட மாடல் அரசில் பெண்களுக்கான திட்டங்களைப் பார்த்து பார்த்து இப்போது ஆண்களும் கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.
மகளிர் உரிமைத் தொகையால் பெண்கள் தங்களுடைய குடும்பத்தை பாதுகாக்கிறார்கள். அது ஆண்களையும் சேர்த்துதான் வளர்ச்சியடையச் செய்யும். என்னை தங்களுடைய குடும்பத்தில் ஒருவராக நினைத்து, பாசம் காட்டுகின்ற அத்தனை தாய்மார்கள், அவர்கள் குடும்பத்தின் ஆண்கள் என்று அனைத்துத் தரப்புக்குமான நல்லாட்சியாக, திராவிட மாடல் ஆட்சி எப்போதும் தொடரும் என முதல்வர் ஸ்டாலின் பேசினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.