அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் எந்த பகுதியிலும் தண்ணீர் தேங்கவில்லை என்று நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என். நேரு தெரிவித்துள்ளார்.
சென்னை ரிப்பன் கட்டிட வளாகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நேரு, வடகிழக்கு பருவமழை காலத்தில் 48 செ. மீ. மழை பெய்யும் என்றால், கடந்த 15-ம் தேதி ஒரே நாளில்30 செ. மீ. வரை பெய்துள்ளது. இருந்தாலும், அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், ஒருசில இடங்களைத் தவிர மற்ற இடங்களில் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. ஒரு சுரங்கப் பாதை தவிர மற்ற அனைத்திலும் போக்குவரத்து நடைபெறுகிறது.
‘வெள்ளச்சேரியாக இருந்ததை வேளச்சேரியாக மாற்றிவிட்டீர்கள்’ என்று காலையில் முதல்வர் வந்து சந்தித்தபோது மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். நாராயணபுரம் ஏரி பகுதியில் இந்த ஆண்டில்தான் தண்ணீர் நிற்கவில்லை என்று மக்கள் கூறினர். அனைத்து பகுதிகளிலும் வெள்ளம் வடிந்துள்ளது. மக்கள் பாதுகாப்பாக இருக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
ஏற்கெனவே ஒவ்வொரு மண்டலத்திலும் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். முக்கியமான பகுதிகளில் 990 மோட்டார்கள், 400 டிராக்டர்கள் மூலம் தண்ணீர்இறைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. 70 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு, மக்களுக்கு உணவுதயாரிக்க தேவையான பொருட்களும் வழங்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.