பகுதி நேர சிறப்பாசிரியர்களின் கோரிக்கையை ஏற்க மறுப்பது அநீதி. திமுகவின் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அவர்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறையில் 13 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்கள், தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தனித்தனியாக கோரிக்கை மனுக்களை அனுப்பியிருந்த நிலையில், அவை அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்க முடியாது என்றும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
பகுதிநேர ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையைக் கூட ஏற்க தமிழக அரசு மறுப்பது நியாயமற்றதாகும். பகுதிநேர ஆசிரியர்களின் முதன்மைக் கோரிக்கை அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்கப்பட வேண்டும் என்பதுதான். அரசுப் பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி உள்ளிட்ட பாடங்களை கற்றுத் தருவதற்காக 2012-ம் ஆண்டில் ரூ. 5 ஆயிரம் ஊதியத்தில் அமர்த்தப்பட்ட அவர்களுக்கு, இன்று வரை பணிநிலைப்பு வழங்கப்படவில்லை. தமிழக அரசு இந்த கோரிக்கையை கனிவுடன் ஆய்வு செய்து பகுதிநேர ஆசிரியர்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.