தமிழ்நாட்டு மீனவர்கள் வாழ்வாதாரத்தை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நேற்று புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டினத்தை சேர்ந்த 14 மீனவர்களை நெடுந்தீவு அருகில் கைது செய்துள்ளது. தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதலை, ஒன்றிய அரசு தலையிட்டு தடுக்க வேண்டும் என மீனவர் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் ஒன்றிய அரசை வலியுறுத்தி வருகின்றன.
ஆனால், தமிழ்நாட்டு மீனவர்கள் நலன்களை மதிக்காமல், அவர்களது வாழ்வாதாரத்தை நாசப்படுத்தும் இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதலை வாய்மூடி மௌனியாக இருந்து வேடிக்கை பார்த்து வருவதும், ஒரு ஆயிரம் கிலோ மீட்டருக்கும் அதிகமான நீளம் கடற்கரை வளம் கொண்ட, தமிழ்நாட்டின் மீனவர்கள் வாழ்வாதாரத்தை அண்டை நாடு தொடர்ந்து பறித்து வருவதும் அரசியல் அமைப்பு சட்டத்தின் மூலம் உறுதி செய்ய வேண்டிய “நாட்டின் இறையாண்மை” கொள்கைக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.
இனியும் தமிழ்நாட்டு மக்கள் அமைதி காக்க முடியாது என்கிற கொந்தளிப்பான நிலை உருவாகி வருகிறது என்பதை ஒன்றிய அரசு உணர்ந்து, தமிழ்நாட்டு மீனவர்கள் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.