மதுக்கடைகளை நிரந்தரமாக மூட தமிழக அரசு கால நிர்ணயம் செய்து அறிவிக்க வேண்டும் என விசிக உயர்நிலைக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னையில் விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் கட்சியின் உயர்நிலைக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் துரை. ரவிக்குமார் எம். பி. , எம்எல்ஏ-க்கள் சிந்தனைச் செல்வன், எஸ். எஸ். பாலாஜி, பனையூர் மு. பாபு, ஆளுர் ஷா நவாஸ், துணை பொதுச்செயலாளர்கள் வன்னியரசு, எழில்கரோலின், ரஜினிகாந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்புக்கான தேசியக்கொள்கையை மத்திய அரசு உருவாக்க வேண்டும். தமிழகத்தில் மதுக்கடைகளை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு கால நிர்ணயம் செய்து அறிவிக்க வேண்டும். பிஎம்ஸ்ரீ பள்ளி திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தால் சமக்ரா சிக் ஷா திட்டத்துக்கு நிதி வழங்கப்படும் என மிரட்டல் அரசியல் செய்யும் பாஜக அரசுக்கு வன்மையான கண்டனம். நிதியை உடனடியாக வழங்க வேண்டும்.
இலங்கை கடற்படையால் தாக்குதலுக்கு ஆளாகும் தமிழக மீனவர்களை பாதுகாக்க வேண்டும். ஐ. நா. மனித உரிமைகவுன்சில் கூட்டத்தில், போரின்போது காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் பட்டியலை இலங்கைஅரசு வெளியிட மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.