ராமநாதபுரம்: குடிநீர் குழாயில் மீன் குஞ்சுகள் வருவதால் மக்கள் அதிர்ச்சி

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பேரூராட்சியில் குடிநீர் குழாயில் உயிருடன் மீன் குஞ்சுகள் வந்துள்ளன. மீன்குஞ்சுகள் வந்த நிலையில் அதை பிடித்து மக்கள் பாத்திரத்தில் வைத்து அதை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். அது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. தொண்டி பேரூராட்சி பகுதிக்கு திருவாடானை அருகே உள்ள கோவனிபாரூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் வீட்டுக்கு வீடு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. தொண்டி தரகன் தெருவில் உள்ள ஒரு வீட்டில் குழாயில் பெண்கள் பாத்திரத்தில் குடிநீரை பிடித்துள்ளனர். 

அப்போது மீன் குஞ்சுகள் உயிருடன் இருந்துள்ளன. அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கூறுகையில், சில நாட்களாகவே பேரூராட்சி சார்பில் வினியோகிக்கப்படும் குடிநீரில் மீன் குஞ்சுகள் வந்தவண்ணம் உள்ளன. எனவே குடிக்கப் பயன்படுத்த முடியாத அவல் நிலை உள்ளது என அதிர்ச்சி தெரிவித்தனர். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுபற்றி அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, திருவாடானை, தினையத்தூர், காடங்குடி பகுதிகளில் கண்மாய் ஓரம் வழியாக வரும் கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கண்மாய் பகுதியில் உள்ள நீர் உள்ளே புகுந்து விடுவதால் குடிநீரில் மீன் குஞ்சுகள் புகுந்து வந்திருக்கலாம். அதை அடைக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும், ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி