விருதுநகர் மாவட்டத்தில், நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பஞ்சாயத்துராஜ் கட்டுப்பாட்டில் உள்ள 284 கண்மாய்களில் விவசாயிகள் விவசாய பயன்பாட்டிற்கும் மற்றும் மண்பாண்டத் தொழில்களுக்கும் இலவசமாக களிமண் (Clay) மற்றும் வண்டல் மண் (Silt) எடுக்க சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் மூலம் இணைய வழியாக அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் நாளது தேதிவரை 1312 விவசாயிகள் மற்றும் மண்பாண்டத் தொழிலாளர்கள் பயனடைந்துள்ளனர். கண்மாய்களில் களிமண் மற்றும் வண்டல் மண் எடுப்பதைக் கண்காணிக்கும் பொருட்டு மாவட்ட அளவில் துணை ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் நிலையில் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், மேற்படி திட்டத்தினை முறைகேடாக பயன்படுத்தியதாக இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் வத்திராயிருப்பு வட்டங்களில் தலா ஒரு வழக்கு வீதம் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ஆறு (06) வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
எனவே, மேற்படி திட்டமானது விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர் பயன்பெறும் வகையில் சீறிய நோக்கத்தோடு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கப்பட்ட திட்டமாகும். இதில் முறைகேடு மற்றும் விதிமீறல்கள் இன்றி விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.