சிவகாசி நகர் காவல் நிலைய பகுதியில் திருட்டு போன 40 செல்போன்கள் மீட்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த நான்கு மாதங்களாக செல்போன் திருடு போனதாக வந்த புகார்கள் குறித்து, குற்றப்பிரிவு போலீஸார் மனு ரசீது பதிவு செய்து, செல்போன் விவரங்களை மாவட்ட சைபர் கிரைம் பிரிவுக்கு மேல் நடவடிக்கைக்கு பரிந்துரை செய்தனர். இதற்கான உருவாக்கப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட இணையதளத்தில் செல்போன் விவரங்களை பதிவு செய்து, திருடு போன செல்போன்கள் பயன்பாடு குறித்து கண்காணித்து வந்தனர். அதன் மூலம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், கடந்த 4 மாதங்களில் திருடு போன 40 செல்போன்களை குற்றப்பிரிவு போலீஸார் மீட்டனர். நேற்று சிவகாசி டிஎஸ்பி பாஸ்கர் மீட்கப்பட்ட செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார். குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் பரமேஸ்வரி, நகர் காவல் ஆய்வாளர் செல்லப்பாண்டி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.