விவசாயிகள் தங்கள் நெற்பயிரை குறித்த காலத்திற்குள் அறுவடை செய்ய உதவிடும் வகையில் விவசாயிகள் அறுவடை இயந்திரங்களின் உரிமையாளர்களை நேரடியாகத் தொடர்பு கொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் தனியாருக்குச் சொந்தமான 4456 நெல் அறுவடை இயந்திரங்களின் உரிமையாளர் பெயர், அலைபேசி எண், இயந்திரத்தின் பதிவு எண் உள்ளிட்ட விபரங்கள் மாவட்டம் வாரியாக மற்றும் வட்டாரம் வாரியாக உழவன் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது. விவசாயிகள் தங்கள் நெற்பயிரை குறித்த காலத்தில் அறுவடை செய்வதற்குப் போதுமான வேலையாட்கள் இல்லாத நிலையில் அறுவடைப் பணிகளை உரிய காலத்தில் செய்வதற்கும் மற்றும் குறைந்த செலவில் மேற்கொள்வதற்கும் ஒருங்கிணைந்த அறுவடை இயந்திரங்களின் பங்கு முக்கியம் வாய்ந்ததாக உள்ளது.
நெல் அறுவடை காலங்களில் அறுவடை இயந்திரங்களின் வாடகை அதிகரிப்பதோடு விவசாயிகள் அறுவடை இயந்திரங்களைப் பெறுவதற்காக இடைத்தரர்களை அணுக வேண்டியும், மேலும் வாடகையோடு தரகுக் கட்டணத்தையும் சேர்த்து செலுத்த வேண்டியுள்ளதால் அறுவடை இயந்திரங்களின் வாடகை அதிகரிக்கப்படுவதோடு விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் நிலையும் உள்ளது. இதனை தவிர்த்திட அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மேற்படி உரிமையாளர்கள் விவரங்கள் உழவன் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.